Tuesday, 25 February 2014




குடிக்காதே தம்பி குடிக்காதே !!

குடிக்காதே தம்பி குடிக்காதே
குடிக்காதே தம்பி குடிக்காதே
அடிமைத் தனமாய் மயங்கிவிடாதே 
குடும்பம் இருக்கு மறந்துவிடாதே!  (குடிக்காதே)

பாட்டிலைப் பாரு எழுத்தும் பாரு
பழகும் போததைப் படிச்சுக்கோ—குடிக்கப்
பழகும் போததைப் படிச்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ  (குடிக்காதே)

வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது
வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது`--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது `--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது
நினைத்து உனையும் உணராவிட்டால்
நீசரைநீ தப்ப முடியாது.
குடிப்பவன் தானே திருந்தாவிட்டால்
குடியை ஒழிக்க முடியாது. (குடிக்காதே)

கெடுக்குற காலம் கலிகாலம்—இனி
தடுக்குற முயற்சி இருக்காது.—குடி
தடுக்குற ஆட்சி வாராது.
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
குக்டிக்கத் தடையும் சட்டம் போட்டா
வடிக்கிற தொழிலும் உருவாகும்—அதை 
தடுக்குற படையே வளமாகும்.
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
கெடுக்குற குடியும் இருக்காது. (குடிக்காதே)



கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 18 February 2014

வேறு வழி சிந்திப்பீர்

வேசி போலே போதையோ
காசை யெல்லாம்  பறிக்குது.
கடனாளி ஆக்குது.
உறவுகளை  அழிக்குது.
வேண்டாம் அந்தக் குடிப்பழக்கம்
விட்டு விடு தோழனே

தாய்க்குலத்தின் வேதனை
தமிழரசு யோசிப்பீர்..
ஒழித்திடுங்கள் மதுவினை
உளமாற  வாழ்த்துவர்
வளர்சசிப் பணி நிதிகாண
வழி  வேறு சிந்திப்பீர்.

குடிகாரப் பாவிகளால்
குடும்பங்கள் வாடுது.
விடியலைப் பாராமல்
வேரோடு  மடியுது.
ஒழித்திடுங்கள மதுவினை
உளமாற வாழ்த்துவர்..



கொ.பெ.பி.அய்யா
மது மரணத் தூது !

மதுவேண்டாம் மதுவேண்டாம் மனிதனே!
மதுவேண்டாம் மதுவேண்டாம் மறந்திடு!
மரணம்தான் மரணம்தான் மதுவாலே!
மரணம்தான் மரணம்தான் குடிக்காதே!

அய்யய்யோ அய்யய்யோ உயிர்போகுமே!
அய்யய்யோ அய்யய்யோ உறவழுமே!
பொய்யில்லை பொய்யில்லை நிசமாகுமே!
பொய்யில்லை பொய்யில்லை எழுத்ததுமே!

குடிக்கிறாய் குடிக்கிறாய் விசந்தானுமே!
குடிக்கிறாய் குடிக்கிறாய் நிதம்தானுமே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் உனக்குள்ளயே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் பிணமாகவே!

கரைக்குதே கரைக்குதே உனைக்கொல்லவே!
கரைக்குதே கரைக்குதே குழிதள்ளவே!
மறைக்குதே மறைக்குதே நிலை எண்ணவே!
மறைக்குதே மறைக்குதே உடல் தின்னவே!

அழிஞ்சதே அழிஞ்சதே குடும்பம் அழிஞ்சதே!
அழிஞ்சதே அழிஞ்சதே குணமும் அழிஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே நாணம் தொலைஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே மானம் தொலைஞ்சதே!

போகுதே போகுதே நலம் போகுதே!
போகுதே போகுதே வளம் போகுதே!
போகுதே போகுதே உரம் போகுதே!
போகுதே போகுதே உயிர் போகுதே!

வேகுதே வேகுதே சுகம் வேகுதே!
வேகுதே வேகுதே அகம் வேகுதே!
வேகுதே வேகுதே கடன் வேகுதே!
வேகுதே வேகுதே உடல் வேகுதே!

ஆகுதே ஆகுதே நாள் ஆகுதே!
ஆகுதே ஆகுதே பாழ் ஆகுதே!
ஆகுதே ஆகுதே எமன் ஆகுதே
ஆகுதே ஆகுதே முடிவாகுதே!

கொ.பெ.பி.அய்யா.



மதுக்கூடம் மட்டும் அல்ல!

மது மது எனச்சொல்லும் சொல்லில்
மயக்கம் விழிக்கிறதோ!
அது அது எனத் துள்ளும் துள்ளில்
ஆசை இழுக்கிறதோ!

ஞானிகள் குழுமும் ஞான சபையோ
நானே அசந்தேனே!
தானாய் உதிர்ந்திடும் தத்துவ மொழியோ!
வீணாய் சிந்தியன`!

சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தம் பகைக்கும்
சூனியம் மதுதானோ!
மல்லும் மௌனமும் எல்லாம் நானென
வில்லனும் மதுதானோ!

கவிகள் கதைகள் அறிவியல் புதிர்கள்
அவியல் தீஞ்சிடுமே!
பரிவு பாசம் உருகும் நட்பும்
மருகி மாஞ்சிடுமே!

இளமை இந்தியா மறைவினில் ஆடி
வறுமை மறந்திடுமே!
முதுமை கூட இளமை தேடி
மதுவில் பறந்திடுமே!

வேற்றுமை துறந்த ஒற்றுமை மனிதம்
விளையும் கூடமிதோ!
ஆற்றும் காற்றில் தோற்றே ஓடும்
தூற்றும் பாடமிதோ!

மதுவில் தட்டும் அதிர்வில் கொட்டும்
மனதும் திறந்திடுமோ!
அடக்கிய வலிகள் அனைத்தும் கரைந்தும்
அதுவாய் பழகிடுமோ!

மெதுவாய் சுகமாய் பதமாய் கொல்லும்
மதுவே விசந்தானோ!
அதுவாய் இதுவாய் எதுவாய் வெல்லும்
அழிப்பதும் மதுதானோ!

மனிதம் தொலைத்து மனிதம்  பேசும்
மதுக்கூடம் மட்டுமல்ல.
முழுதாய் தொலைந்து முடிவைத் தேடும்
மரணக்கூடம் நில்லு!



கொ.பெ.பி.அய்யா.
தேனானது வீணானது.

தேனான வாழ்வு வீணாத்தான் போமோ!
தெருவே கதிதானோ!
ஆணான நானும் கூனானேன் தானே!
அறிவை இழந்தேனே!

சேராத சேர்க்கை சேர்ந்திருந்தேனே!
சிறுமை அடைந்தேனே!
தேறாத போக்கை தேர்ந்திருந்தேனே!
தெருநாய் ஆனேனே!

சண்டாளர் கூடும் சாராயக் கடையே
சொந்தம் கொண்டேனே!!
கொண்டாளை மறந்தும் கண்டாளை அலைந்தும்
கதையில் தொலைந்தேனே!

பொழுதை தொலைக்கும் புறம்போக்கு நீசர்
புறக்கடை கிடந்தேனோ!
அழுத புள்ளையின் பாலைக் கெடுத்து
ஆட்டத்தில் கொடுத்தேனே!

உறவுகள் பதுங்கி தனிமையில் பிதுங்கி
உணர்வுகள் சுமந்தேனே!
வெறுமையின் வலியை தாங்க மயங்கி
மதுவில் விழுந்தேனே!

உழைப்பதை விட்டு தொலைப்பதைத் தொட்டு
உதிரம் காய்ந்தேனே!
அலைகளில் பட்டு கரையினில் ஒதுங்கி
அடங்கி ஓய்ந்தேனே!

காக்கை கழுகுகள் காலம் பார்த்துக்
காத்துக் கிடக்கின்றன!
போக்கைத் தேடி பாவி உயிரும்
பறக்கத் துடிக்கிறதே!

 கொ.பெ.பி.அய்யா.
கள்ளும் காமமும்

சொல்லுவ தெல்லாம்
சொல்லி முடித்தும்
கள்ளுங் காமமும்
கலந்திடத் துணிந்தேன்.

காமம் மிகுந்தால்
நாணம் மறக்கும்.
கள்ளும் மிகுந்தால்
எல்லாம் மறக்கும்.

நினைந்திடக் காமம்
நெஞ்சை மயக்கும்.
நனைந்திடக் கள்ளும்
நினைவை மயக்கும்.

ஊடலைக் காமம்
ஒளித்தே மறைக்கும்
கூடலைக் கள்ளும்
குழிக்குள் புதைக்கும்.

பிரிவினிற் காமம்
பெருகி உருக்கும்.
உறவினிற் கள்ளும்
உருக்கி யழிக்கும்.

காமம் துணிந்தால்
ஏமம் உடைக்கும்.
கள்ளும் முனைந்தால்
கோமணம் இழக்கும்.

சுற்றமும் மறக்கும்
முற்றியும் காமம்.
பெற்றவள் வெறுக்கவும்
பற்றிடுங் கள்ளும்.

அலரிய காமம்
களம் அறியாது.
உளற்செய் கள்ளும்
ஒழுக் கறியாது.

மிஞ்சிய காமம்
நெஞ் சடங்காது.
விஞ்சிடக் கள்ளும்
வெறி ஒடுங்காது.

பொருந்தாக் காமம்  
புலம்பித் திரியும்.
அருந்தாக் கள்ளும்
அவனைச் சொரியும்.

காமம் தொலைந்திட
கலங்கிடும் சித்தம்.
கள்ளும் நிறைந்திட
விலங்கிடும் பித்தம். 

காமம் மறந்தும்
கள்ளும் உண்டும்
சாமம் செத்தும்
சண்டாளன் ஏனோ!

வாழ்வைத் தொலைத்தும்
வசையினைச் சுமந்தும்
நாளினை இழந்தும்
நடை பிணம் ஏனோ!

உழைப்பினை விற்று
உயிரினைத் தோற்று
அழையாச் சாவை
அழைப்பதும் ஏனோ!


கொ.பெ.பி.அய்யா.

பி.கு;-கள் எனும் சொல் பொதுவாக மதுவகைக்

குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.

Monday, 17 February 2014

குடிகாரன் பேச்சு!!

குடிக்கிறான் குடிக்கிறான்
கோட்டி வரக் குடிக்கிறான்
அழிக்கிறான் அழிக்கிறான்
அவனைத்தானே அழிக்கிறான்

ஆடி ஆடி நடக்கிறான்.
பாடி பாடி தொலைக்கிறான்.
நடக்கக்கூட கதியில்லாமல்
நடை பாதையில் விழுகிறான்

பாடு பட்ட காசையெல்லாம்
ஓடாக நினைக்கிறான்.
வீடு ஒன்னு இருக்குதான்னு
விலாசத்தையே கிழிக்கிறான்.

பெண்டாட்டி பிள்ளைகளை
போதையிலே மறக்கிறான்
கொண்டாடிக் கூத்தாடி
கோமணத்தை இழக்கிறான்

கிடக்கிறான் கிடக்கிறான்
கேவலமாய் கிடக்கிறான்
உயிரோடு பிணமாகி
ஊர் சிரிரிக்கக் கிடக்கிறான்

பித்தனாகித் திரிகிறான்
பிச்சை கூட எடுக்கிறான்
இருக்கும் வரை குடிக்கிறான்
இல்லாட்டித் திருடுறான்

சுத்தி சுத்தி மதுக்கடையை
சொக்கியங்கே படுக்கிறான்
உருக்கி உருக்கி உடலையே
ஒரு நாளில் தொலைக்கிறான்

நம்பி வந்த குடும்பமோ
நடுத் தெருவில் தவிக்குது.
தம்பி இவன் போலாரும்
தடமழியப் போக வேணாம். 

குடிகாரன் பேசும் பேச்சு
விடிஞ்சாலே முடிஞ்சு போச்சு.
உண்மையத்தான் சொன்னாலும்
உளறல் என்றே எண்ணுவார்

கொஞ்ச நேரம் உனை மறக்க
எஞ்சும் வாழ்வை சிதைப்பாயோ!
குடிப்பதை விட்டு விடு
விடியலைத் தேடி எழு!

கொ பெ.பி.அய்யா.